ஹலோ ஒரு நிமிடம்… September 2017 ஹலோ ஒரு நிமிடம்… September 2017
ஹலோ ஒரு நிமிடம்… சத்யமேவ ஜெயதே என்ற மந்திர சொற்களுக்கு தான் எவ்வளவு வலிமை. தர்மம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நெஞ்சில் உரம் கொண்ட மனிதர்களின் 15 வருட போராட்டம்தான், பாபா... ஹலோ ஒரு நிமிடம்… September 2017

ஹலோ ஒரு நிமிடம்…
சத்யமேவ ஜெயதே என்ற மந்திர சொற்களுக்கு தான் எவ்வளவு வலிமை. தர்மம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நெஞ்சில் உரம் கொண்ட மனிதர்களின் 15 வருட போராட்டம்தான், பாபா ராம் ரஹீம் இன்சான் எனும் தேரா சச் சவுதா அமைப்பின் தலைவனுக்கு சட்டத்தின் மூலமாக கடுமையான தண்டனை வாங்கி கொடுத்துள்ளது.
இரண்டு சாத்விகள் 15 வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக, 250 கிலோ மீட்டர் உள்ளு£ர் பஸ்ஸில் பயணம் செய்து, பஞ்ச்குலா நீதி மன்றத்திற்க்கு நம்பிக்கையோடு வந்துள்ளனர்.
இரு சாத்விகளுக்கும் போதிய வசதிகள் இல்லை. ஒரே ஒரு போலிஸ் துணையோடு, நூற்றுக் கணக்கான தேரா சச் சவுதா அமைப்பினரின் ரவுடிகள் சுற்றி மிரட்ட, தொடர்ந்து சட்டத்தின் மூலமாக போராடினர். இதில் ஒரு சாத்வியின் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார்.
சிபிஐ நீதி மன்றத்தின் நேர்மையான ஒரு நீதிபதி மாண்புமிகு ஜகதீப் சிங் அவர்கள், சரித்திர முக்கியத்துவம் கொண்ட ஒரு தீர்ப்பை, தைரியமாக கொடுத்துள்ளார். அரசியல் அழுத்தங்கள். வெளியே அக்கிரமம் செய்ய தயா£ராக இருக்கும் லட்சக்கணக்கான ரவுடி தொண்டர்கள் என்று பயமுறுத்தினாலும், அசராத அஞ்சா நெஞ்சத்தோடு அந்த இரண்டு அபலை பெண்களோடு தர்மத்தினை காத்து நின்றார்.
பாபா ராம் ரஹிம் தனது அமைப்பினை சார்ந்த பெண் பக்தர்களை கற்பழித்து, தட்டிக் கேட்பவர்களை ரவுடிகளை வைத்து மிரட்டி, கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்துள்ளான்.
மத குரு என்ற பெயரில் உல்லாச வாழ்கை, சினிமா, அரசியல் என ஒரு ராஜாங்கமே நடத்தி வந்துள்ளான். 1000 கோடிகள் சொத்து. ஆள் பலம். அரசியல் வாக்கு வங்கி எனும் பலம். ஆனாலும் 2002ம் ஆண்டு ‘‘பூரா சச்’’ எனும் சிறு பத்திரிகை இவனது உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியது.
அந்த பத்திரிகையாளர் மாண்புமிகு ராம் சுந்தர் சத்ரபதி, விட்டுவிடு என்று மிரட்டப்பட்டும், விடாது எழுதிவந்தார். 5 முறை சுடப்பட்டு 28 நாள் மருத்துவமனையில் போராடி இறந்தார். அவரது மரண வாக்குமூலத்தை வாங்க எந்த காவலரும் வரவில்லை.
21 வயதே ஆன அவரது மகன், மாண்புமிகு அன்ஷீமன் சத்ரபதி, துக்கத்தோடு, ‘பூரா சச்’ என்ற பத்திரிகையை கையிலெடுத்து நடத்தி, 2003ம் ஆண்டு சிபிஐ இடம் வழக்கு விசாரணையை ஒப்படைத்தார்.
மிகவும் பிரசித்தி பெற்ற மாண்புமிகு வழக்கறிஞர்கள் ராஜீந்தர் சச்சர், ஆர்.எஸ். சீமா, அஷ்வின் பக்ஷி&லேக்ராஜ் ஜீ என அனைவரும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்த வழக்கை வாதிட்டனர். 15 வருடங்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் அனுபவத்தையும் கொடுத்து உதவினர். மிரட்டல்கள், லஞ்சங்கள் என பலவற்றை தாண்டியே இந்த இரண்டு சாத்விகளுக்கும் துணை நின்றனர்.
சிபிஐ அதிகாரிகள் மாண்புமிகு சத்திஷ்தாகர் டி.டி.ஜி முலிஞ்சா நாராயண் மற்றும் அவரது உதவியாளர்கள் நீதியை மட்டுமே முன் வைத்து வழக்கை விசாரித்தனர்.
யோசித்து பாருங்கள். இரண்டு பயந்த ஏழை சாத்விகள். ஒரு கோடி மக்களின் ஆதரவு பெற்ற 1000 கோடிகளுக்கு அதிபதியான ஒரு போலி மதகுரு! அரசியல் பக்கபலம் வேறு!!
இந்த மாண்புமிகு 11 பேர்கள் தான் சட்டத்தின் மாட்சிமையை! நமது சட்டத்தின் மீது நமது பாமரர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை! மீட்டெடுத்திருக்கிறார்கள். இவர்களில் யாரேனும் ஒருவர் பயந்தோ, தயங்கியோ அல்லது மயங்கியோ இருந்திருந்தாலும் தர்மம் ஜெயித்திருக்காது.
இவர்களுக்கு நாம் தலை வணங்கி நன்றி சொல்ல வேண்டும்.
கெடுதல் செய்பவன் மட்டுமே கெட்டவன் அல்ல. அதை பொறுத்திருந்து, ஒரமாக நிற்பவனும் குற்றம் செய்தவன் தான் என்பது சான்றோர் வாக்கு.
இந்த வழக்கை இறுதி வரைக்கும் கொண்டு சென்று வெற்றி கண்ட இரண்டு சாத்விகளுக்கும் வீர வணக்கம்.
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *